May 10, 2018

சாதி இல்லை என்று கூறும் அரசாங்கம் சாதிச்சான்றிதழ் கேட்கலாமா?

வானொலி நிகழ்ச்சியிலும் தொலைக்காட்சியிலும் குறிப்பாக  இளைஞர்கள் இக்கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுக்கும் இக்கேள்வி நியாயமாகக் பட்டாலும்,இது அவர்களின் அறியாமை அடையாளமாகும். சாதியில்லை என்று சொல்லிவிடிவதால் சாதி இல்லாமல் போகாது. சாதியை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முள்ளை முள்ளால் எடுப்பது போன்று,சாதியை சாதியடிப்டைச் சலுகையால் ஒழிப்பது என்பது இம் முயற்சி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எச்சமுதாயம் சாதியின் பெயரால் அடக்கப்பட்டதோ,உரிமை பறிக்கப்பட்டு, வாய்ப்புத் தடுக்கப்பட்டதோ அச்சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய்து உயர்த்த வேண்டுமானால் அச்சாதியின் மூலமாகத்தானே அவர்களை அடையாளங்காண வேண்டும்?

நமது நிலமாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான உரத்தை நாம் போடுவதில்லை. ஒவ்வொரு நிலத்தையும் மண் பரிசோதனை செய்து அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்பவே உரம் இடமுடியும். அதேபோல், சாதியால் அடையாளங் கண்டு, சலுகை அளிக்க சாதியைக் கேட்க வேண்டியுள்ளது. இன்றைக்கு எல்லாச் சாதியினரும் ஒரே மாதிரியான சமுதாய நிலையையும் கல்வி நிலையையும் பெற்றிக்கவில்லை.

சில சாதி இவற்றில் உயர்ந்து நிற்கின்றனர். சில சமுதாயத்தாவர் தாழ்ந்து கிடக்கின்றனர். வீழ்ந்து கிடக்கின்றவர்களை உயர்த்த ஒரு ஏற்பாடு,உதவ வேண்டும். அதுவே இடஒதுக்கீடு. உயர் சாதிப் பிள்ளையும, தாழ்ந்த சாதியில் கூலியாளின் பிள்ளையும் ஒன்றாக போட்டியிட முடியுமா? போட்டியிட்டால் உயர் சாதிப் பிள்ளையே வெற்றி பெறும். எனவே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை கைத்தூக்கிவிடும் கருவியாக இடஒதுக்கீடு அமைகிறது. அதைத் தர சாதியை அறிய வேண்டியுள்ளது. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் கேட்கப்படுகின்றது.

தாழ்த்தப்பட்டவர்களிலும் மேல்நிலையில் உள்ளவர்கள் உள்ளார்களே! அவர்களுக்கு  ஏன் சலுகை. அச்சாதியில் உள்ள கீழ்நிலை மக்களுக்குத்தானே இடஒதுக்கீடு வேண்டும் என்ற கேள்வி நியாயமான கேள்வி. அதற்கு அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படும் சலுகையைச் சரியாகப் பின்பற்றினாலே இக்குறை நீக்கப்படும்.

அதாவது, சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கியவர்களுக்குச் சலுகை தர வேண்டும் என்கிறது சட்டம். நாம் சமுதாயத்தை மட்டும்(சாதியை மட்டும்) பார்க்கிறோம். கல்வி நிலையைப் புறக்கணிக்கிறோம். அந்நிலையை மாற்றி, இடஒதுக்கீடு பெறும் சாதியிலே கல்வியில் தாழ்ந்துள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு தந்தால் அச்சாதியில் கல்வியறிவு பெற்ற(பட்டம் பெற்று) பெற்றோரின் பிள்ளைகள் தானே ஒதுக்கப்பட்டுவிடும்.இதன் மூலம், இடஒதுக்கீடு பெறும் சாதியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அப்பயன் சென்றடையும். சரியான சமூக நீதியாகவும் நிலைக்கும்.

தட்டச்சு உதவி: இரம்யா கதிர்வேல்
குறிப்பு: மஞ்சை வசந்தனின் தப்புத்தாளங்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை இது.

May 6, 2018

இடஒதுக்கீடு - தொடரும் விவாதம்


நலங்கிள்ளி எழுதிய 'இடஒதுக்கீடு - தொடரும் விவாதம்' புத்தகத்தை அண்மையில் கிண்டில் கருவியின் மூலமாக படித்து முடித்தேன். அற்புதமான புத்தகம். தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக இருப்பதற்கு தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69% இட ஒதுக்கீடுதான் காரணம். ஆனால் கொடுமை என்னவென்றால் அந்த இட ஒதுக்கீட்டின் மூலமாகவே சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பை பெற்றவர்கள் அதற்கு எதிராக பேசுவதுதான்.

அந்தவகையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களும், இட ஒதுக்கீட்டைப் பற்றி தெரியாதவர்களும் அதைப்பற்றி கொள்வதற்காகவும் கேள்வி-பதில்(கேள்விகளை கீழே கொடுத்திருக்கிறேன்) வடிவில் அருமையாக நலங்கிள்ளி அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு அச்சுப்பதிப்பாக சாளரம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் மின் பதிப்பாக, கிண்டில் பதிப்பாக இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

சமூகநீதியில் அக்கறை உள்ளவர்களும், இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று.

புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்ற கேள்விகள்:

1. உயர்கல்விப் பயிலகங்கள் என்பவை யாவை? அங்கே இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளதா?

2. ஆனால் அரசின் இந்த முடிவு உயர் கல்வியை மண்டல்மயப்படுத்துவதாகும் என்று பல ஆங்கில, இந்தி ஊடகங்கள் அப்போதே விமர்சித்தன. இப்போதும் இத்தகைய விமரிசனங்கள் வெவ்வேறு சூழல்களில் எழுகின்றன. மண்டல்மயப்படுத்துவது என்றால் என்ன?

3. இந்த ஊடகங்கள் மண்டலை அன்று வி.பி.சிங் காலத்திலும் எதிர்த்தன, இன்றும் காலத்திலும் எதிர்க்கின்றன, இப்படித் தொடர்ந்து எதிர்ப்பதற்கு காரணம் என்ன?

4. தனியார்த் துறை முதலாளிகள் இந்த இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டிவிட வேண்டிய காரணம் என்ன?

5. தில்லியில் மருத்துவ மாணவர்கள் விளக்குமாற்றால் சாலை பெருக்குவது தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பது, வண்டி இழுப்பது, "ஷூ பாலிஷ்" போடுவது என விதவிதமாக ஊடகங்களுக்குப் போஸ் கொடுத்தார்களே ஏன்?

6. அப்படியானால் இடஒதுக்கீடு என்பது முற்பட்டவர்களைப் பிற்பட்டவர்கள் ஆக்குவதா?

7. இட ஒதுக்கீட்டைக் கண்டுபிடித்தது யார்?

8. இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

9. முன்னோர்கள் செய்த தவறுக்கு இப்போதுள்ள முற்பட்ட சாதியினரைப் பழிவாங்குவது நியாயம் தானா?

10. இதற்கு ஒரு முடிவே கிடையாதா? எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இட ஒதுக்கீடு வழங்குவது?

11. இந்த உலகமயமாக்கக் காலத்தில் இன்னும் சாதி வேறுபாடு பேணப்படுவதாகச் சொல்வது சரிதானா? பொது இடங்களில் சமத்துவம் காக்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோமே? இட ஒதுக்கீடு இன்னமும் தேவைதானா?

12. இட ஒதுக்கீடின்றி உயர் கல்வி பயின்று சாதித்துக் காட்டிய தலித் மாணவர்கள் இல்லையா?

13. இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டை அதிகரித்துக் கொண்டே போகலாமா? இதற்கொரு வரம்பு வேண்டாமா?

14. சட்டத்தின் முனை அனைவரும் சமம் என்னும்போது கல்வி, வேலை வாய்ப்புப் போட்டியிலும் அனைத்துச் சாதியினரையும் சமமாக நடத்த வேண்டாமா?

13. அரசு ஒரு பக்கம் சாதிவேறுபாட்டை ஒழிப்போம் என்கிறது. மறுபுறம் பள்ளிப் பிஞ்சுகளிடமே சாதி கேட்கிறது. இது முரண்பாடில்லையா?

15. அரசு சாதி கேட்பதால் நாட்டில் சாதிப் பிளவுகள் ஏற்பட்டு அமைதி கெடாதா?

16. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பவர்கள் சாதியவாதிகள் அல்லவா?

17. எல்லா மாமரங்களும் ஒன்றே போல் செழித்துக் குலுங்குவதில்லையே, மாமரங்களுக்குள்ளேயே சாதி வேறுபாடுகள் இருக்கும் போது மனிதர்களுக்குள்ள சாதி வேறுபாட்டை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்றெல்லாம் அலட்டிக்கொள்வது ஏன்?

18. பாரப்பனர்களிலும் ஏழைகள் இருக்கிறார்களே? சாதி வகையில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைவிட பொருள் வகையில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தானே சிறந்த சமூநீதியாக இருக்கும்?

19. மண்டல் குழு ஒரு பழைய மக்கள் தொகைக் கணக்கை ஆய்விற் கொண்டது உண்மை தானா?

20. மேல் சாதியினரும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் பட்டியல் சாதியினராகப் பொய்ச் சான்றிதழ் காட்டி இட ஒதுக்கீடு பெறுவது முறை தானா?

21. ஏற்கனவே இட ஒதுக்கீட்டைப் அனுபவித்து முன்னேறிவிட்டவர்களில் அடுத்தடுத்த தலைமுறையினரும் இந்த உரிமையைக் கேட்பது நியாயம் தானா?

22. அரசுத் துறையில் பாட்டாளிகளுக்கு இடம் கேட்பது ஒடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு நாமே ஆள்சேர்த்துக் கொடுத்தது போல் ஆகிவிடாதா?

23. இட ஒதுக்கீட்டுக் கொள்கை வாக்கு வங்கியைக் குறிவைத்து அரசியல்வாதிகள் செய்யும் சதிதானே?

24. இட ஒதுக்கீட்டுக்குப் பாடுபடுவதாகச் சொல்லி கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களது உதவியாளர்களையும் மருத்துவர்களையும் பட்டயக் கணக்கர்களையும் பார்ப்பனர்களாகப் பார்த்துவைத்துக் கொள்வது இரட்டை வேடமில்லையா?

25. உயர் கல்வி இட ஒதுக்கீட்டுச் சிக்கலில் தில்லி அரசு அவசர அவசரமாக முடிவெடுத்து விட்டதா?

26. மார்க்சிஸ்டுக் கட்சியும் சங் பரிவாரமும் சொல்வது போல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுக்கருத்தை வளர்த்தெடுத்து இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர முடியாதா?

27. இட ஒதுக்கீடு சமூகச்சிக்கல்கள் யாவற்றுக்கும் தீர்வாகுமா?

28. கல்வி, வேலை, பதவி உயர்வு என்று அடுத்தடுத்து ஒவ்வொன்றிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தேவைதானா?

29. கல்வி, வேலை வாய்ப்பு என இட ஒதுக்கீடு வழங்கிக் கொண்டே செல்வது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடாதா?

30. ஒடுக்குண்டோருக்குத் தொடக்க நிலையிலிருந்து தரமான சமச்சீர்கல்வி வழங்காமல் அவர்களை உயர் கல்வி நிறுவனங்களுக்குக் கொண்டுவரப்போவதாக அரசியல்வாதிகள் சொல்வது ஏமாற்றல்லவா?

31. பெரும்பாலான தலித் மாணவர்கள் தொடக்கக்கல்வியைக்கூட முடிக்க இயலாமல் படிப்பைப் பாதியில் கைவிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்விப் பயிலகங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது?

32. உலகில் எங்கே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளது? உலகில் எங்குமில்லாத அதிசயமாக இங்கே மட்டும் இது தேவை தானா?

33. உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு என்றால் தகுதி திறமை என்னாவது?

34. மருத்துவத் துறையிலும் இடஒதுக்கீடு என்பது உயிரோடு விளையாடுவதாகாதா?

35. இட ஒதுக்கீடு மருத்துவம் போன்ற சேவையில் மனித நேயத்தை வளர்க்குமா? எப்படி?

36. சிறப்பான சில துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தகுதி திறமை வாதத்தை மெய்ப்பிக்கவில்லையா?

37. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு என்றால் 30 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்கள் எல்லாம் இந்திய மருத்துவப் பயிலங்களில் நுழைந்து விடமாட்டார்களா?

38. சமூகநீதி திறமை இரண்டும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வழியில்லையா?

39. நடுவணரசின் உயர் கல்விப் பயிலங்களில் நுழைவதற்கு இட ஒதுக்கீடு ஒரு குறுக்கு வழியா?

40. ஐஐடி மாதிரி பெரிய படிப்பு எல்லாம் படிப்பதற்கு இட ஒதுக்கீடு எதற்கு? நல்லாப் படிச்சு வரவேண்டியது தானே என்று கேட்கிறார்களே, இவர்கள் எப்படிக் கல்விக்கூடங்களில் நுழைந்தார்கள் தெரியுமா?

41. இதெல்லாம் பழைய கதை தானே? இன்று அவர்கள் நேர்வழியில் படித்துத்தானே உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பிடிக்கிறார்கள்?

42. இந்தப் பயிலகங்களில் ஏற்கனவே சட்டப்படி இட ஒதுக்கீடு உரிமை பெற்றுள்ள தலித்துகளின் நிலை என்ன?

43. ஏன்? பிற்பட்ட, தலித் மக்களுக்குக்காகக் குரல் கொடுக்க அங்கு அவர்கள் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர்கள் யாரும் இல்லையா?

44. படித்தவர்கள் இட ஒதுக்கீட்டினால்தான் வெளிநாடு சென்றுவிடுகிறார்களா?

45. உயர் கல்வியில் இட ஒதுக்கீடு தருவது உலகளவில் இந்தியாவுக்குள்ள மதிப்பைப் பாதிக்காதா?

46. நடுவணரசின் உயர் கல்விப் பயிலகங்களைக் கல்விக் கோயில்களாக மதித்துப் பாதுகாக்க வேண்டாமா?

47. நடுவணரசின் உயர் கல்விப் பயிலங்களில் சேர்ந்து படிப்பதற்குரிய ஆங்கிலப் புலமையைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களால் பெற முடியுமா?

48. பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் தரமான ஆங்கிலவழிக் கல்வி புகட்டச்சொல்லிப் போராடக்கூடாதா? தமிழில்தான் படிக்க வேண்டும் என்பது தாய்மொழிப் பற்றுக்காகவா?

49. பார்ப்பனர்களின் போராட்டம் தவறானது என்றால் அவர்கள் என்ன செய்வது சரியாக இருக்கும்?

50. சமூகநீதிக்கு எதிரான பாரப்பனிய வலைப்பின்னலை அறுத்து தமிழர்கள் வெல்வது எப்படி?

May 1, 2018

கேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?


உபுண்டு 18.04 LTS பதிப்பு ஏப்ரல் 26-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் நிகழ் அமர்வில்(Live Session) ஏதோ பிழை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டதால் வெளியீடு சற்று தாமதமானது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்ங்கிற மாதிரி உபுண்டு 18.04 லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்!

இந்த முறை நான் GNOME உடன் கூடிய உபுண்டுவை(Ubuntu) நிறுவவில்லை. KDE உடன் கூடிய கேஉபுண்டுவை(Kubuntu) நிறுவியிருக்கிறேன். அருமையாக அற்புதமாக வேகமாகவும் இருக்கிறது. எனக்கு GNOME வைவிட KDE வேகமாக இருப்பதாக தெரிகிறது.

கேஉபுண்டுவில் தமிழ் தட்டச்சு வசதியை கொண்டுவருவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

கீழ்காணும் கட்டளை வரியைக் கொண்டு ibus-க்கு தேவையான பொதிகளை(packages) நிறுவிக்கொள்ளவும்.

sudo apt-get -y install m17n-db m17n-contrib ibus-m17n ibus-qt4 ibus-gtk3 ibus-gtk libreoffice-gtk3


அதன்பிறகு Dolphin File Manager -ஐத் திறந்து Ctrl+H பொத்தான்களை அழுத்தி Home அடைவிற்குள் இருக்கும் .bashrc கோப்பினைத் திறந்து கீழ்காணும் வரிகளை சேர்த்து கோப்பினை சேமித்துவிடவும்.

# For Tamil99 typing
export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus 
export OOO_FORCE_DESKTOP=gnome


கணினியை மறுதொடக்கம்(restart) செய்யவும்.



IBus Preferences ஐத் திறந்து Input Method Tab க்குச் செல்லுங்கள் அங்கு Add பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான தமிழ் உள்ளீட்டு முறைகளை தேர்வு செய்து Add பொத்தானை அழுத்துங்கள். நான் Tamil99 முறையை தேர்வு செய்துள்ளேன். நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்துகொள்ளலாம். General Tab க்குச் சென்று Shortcut Key ஐ அமைத்துக்கொள்ளுங்கள். இந்த Shortcut Key அழுத்தும் போது தமிழ் தட்டச்சு வேலை செய்யும்.